Thoughts…Words…

ஆதவன் தீட்சண்யா

Posted in books, writers introduction by udoit on February 7, 2014

அப்படியென்ன அதியுன்னத புல் புடுங்கப்போகிறோம்?என்ற கேள்வியுடன் மார்ச் 2012ல் தமிழ்மணம் வாயிலாக எனக்கு அறிமுகமானார் ஆதவன் தீட்சண்யா. இப்பதிவு நேற்று அவரின் பொங்காரம் என்ற கதையை வாசித்ததின் பாதிப்பு. நான் நிறைய கதைகள் வாசித்தவனில்லை, தமிழிலக்கியத்தில் புலமையுடையவனுமில்லை ஆனாலும் பொங்காரம் ஒரு சிறந்த படைப்பு என்று உறுதியாக என்னால் சொல்லமுடியும், அதற்கான காரணங்களை இனி விவரமாக பார்ப்போம்.

இக்கதையில் வட(மேற்கு) தமிழகத்தின் வட்டார வழக்கு மிக இயல்பாகவும், நுணுக்கமாகவும் கையாளப்பட்டிருப்பது, கதாபாத்திரங்களுடன் கதைக்களத்தில் வாழ்ந்த அனுபவத்தை தருகிறது. வாசிக்க ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே எனக்கும் இருட்டு பழகி எதெது எங்கெங்கன்னு நெப்புப்படுது. பரமன் தோள்லயும், சுப்புரு தோள்லயும் பொணம் கனக்கும் போது எனக்கும் கனத்தது. இவனையெல்லாம் இத்தினி நாள் உசுரோடவுட்டதே பாவம் என்று காளியப்பன் கொதிக்கும் போது எனக்கும் கொதித்தது. ஓங்காளியம்மன் நோம்பி செலவுக்கு எங்கப் போறதுன்னு அர்ச்சுனனோடு எனக்கும் முழி பிதுங்கியது. இன்னிக்கோ நாளைக்கோன்னு இத்துக்கெடக்கற கூரையை நினைத்து மாரப்பனோடு நானும் வெசனப்பட்டேன். அப்படியே ஆராயியோட சேர்ந்து முப்பத்தேழாவது ஆளாக நானும் கங்காணி வலையில் விழுந்தேன். மேலும் இக்கதையில் கையாளப்பட்டிருக்கும்: “இருட்ல உருட்ற குருட்டுப்பூனையாட்டம், பூசாரி பொய்யும் புலவனார் பொய்யும் சாரி பொய்யில அரைவாசியாகாது, அரசனுக்கு அவன்பாடு ஆண்டிக்குத் தம்பாடு, காத்தில்லாத வூட்ல கையுங்காலும் கட்டிப்போட்டாப்ல ஆயிருச்சு, நாட்டுக்கு ராசா மாறினாலும் தோட்டிக்கு பொழப்பு மாறலே, மீள்றதுக்கு வழி தெரியல மாள்றதுக்கும் குழி தெரியல, வலையில விழாம மீன் எங்கப்போகும் தலைக்கு வராம பேன் எங்கப்போகும்?போன்ற சொலவடைகள் வாழ்க்கையில் எவ்வளவு இன்னல்களிருந்தாலும் அவர்களிடத்திலிருந்த கூர்ந்த அறிவையும், அழகுணர்ச்சியையும் காட்டுகிறது.

காலமாற்றத்தினால் பாட்டன் பூட்டன் காலத்துலயிருந்து பாத்த கொட்டடிக்கும் வேலையை விட்டுவிட்ட மக்கள், இன்று செய்கின்ற தொழில்களாக: ரோடு போடறது, காரைவேலை, செங்கல் அறுக்கறது, மணல்லோடு அடிக்கறது என்று ஆரம்பித்து பஸ் ஸ்டாண்ட்ல ஜோப்பு கத்திரிக்கிறது, பொண்டாளுகள் போலிசுக்கு மாமுல் கொடுத்து செய்யும் தொழில் வரை பட்டியலிட்டு, முக்கிய பாத்திரங்கள் செய்யும் ஜல்லியொடைக்கிற வேலையை விவரித்துக்கொண்டே கதையை மிக சுவாரசியமாக நகர்த்துகிறார் ஆதவன். கொத்தடிமைகளாக மாட்டிக்கொண்டு படும்பாட்டை மிகுந்த நயத்துடன் கோர்வையாக எந்தவொரு மிகையான சொற்களின்றி பொட்டில் அறைந்ததுபோல் சொல்லும் ஆதவனின் திறத்திற்கு கீழ்கண்ட உத்திகள் சான்றாகும்:

  1. கதையின் ஆரம்பத்தில் “…அர்ச்சுனனை கொன்னிருப்பான் உடுப்புக்காரன். தோட்டா தெறிச்சக் குழி இன்னம் வடுவாட்டம் பாறையில இருக்கு. அத பாக்கறப்பவெல்லாம் நடுங்கறான்.” என்று சொல்லி பின் “டெலிபோன் லைனுக்கு குழியெடுக்குற வேல செஞ்சிருக்கான். அப்ப அங்க சேத்திக்கிட்டு வந்த புள்ளதான்…” என்று மல்லிகாவை அறிமுகப்படுத்தி,இன்னிக்கு என்னயத் தொட்டவனுங்க இந்த கொழுந்த கிள்ளறதுக்கு எமுட்டு நேரமாவும்னு மல்லிகா பொங்கி பொங்கி அழுவுறா. யாரு தேத்தறதுன்னு தெரியாம எல்லாக் கண்ணுலயும் தண்ணி” என்பதன் மூலம் ஆரம்பத்தில் குறிப்பிட்ட “பரணை மேல நின்னு உடுப்புக்காரன் பண்ணின அழும்பையும்”,பஞ்சபாண்டவங்களாட்டம் மொட்ட மரமா நின்னு வேடிக்கைப் பார்த்ததின் காரணத்தையும்” குறிப்பால் விளக்குகிறார்.
  2. முதலில் “…சின்னசாமியும் ஆராயியும் தனித்தனி ஒண்டிக்கட்டைங்க. அதால அவங்க சாளைங்க ரண்டுலயும் சமுட்டி, கொட்லான், கிட்னக்கம்பி, சேறுவாங்கி, கெடப்பார, பிக்காசு, மமுட்டி, பாண்டல்சட்டி, புட்டுக்கூடை, மால்சட்டம் எல்லாங் கெடக்கு.” என்று வாசிக்கும்போது இந்த வரிகள் கதைக்களத்தை விவரிக்கின்றன என்று கடந்து போனேன், அதேபோல் “…சாளையிலயே வுட்டுட்டு மத்தவங்க மட்டுந்தான் வேலக்காட்டுக்கு போவமுடிஞ்சது. ஆராயி அடுப்புவேலையப் பாத்துக்கிட்டு அவளயும் பாத்துக்கறா.” என்று வாசித்த போது -இது ஒரு நிகழ்வு- என்று கடந்து போனேன் ஆனால் “…கைல குட்டக் கடப்பாரை. கங்காணி கொடல் தள்ளி கெடக்கான்.” எனும்போதுதான் கதையின் மொத்த கட்டமைப்பும் புரிகிறது.

இவை போன்ற நுண்ணிய உத்திகள் பலவும், வட தமிழகத்தின் பல ஊர்பெயர்களும், பல உணவுவகைகளும் இயல்பாக கதையினோட்டத்தில் சொல்லப்படுக்கிறது. அவை இக்கதையை எப்படி வளப்படுத்தி உயர்ந்த வாசிப்பனுவத்தை தருகிறது என்று எழுத ஆரம்பித்தால் இப்பதிவு ஒரு Mphil Thesis போல ஆகிவிடும் என்பதால் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.

Advertisements